
இந்தியாவில் 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடர் உலகம் முழுதும் பல கோடி ரசிகர்களைப் பெற்று வெற்றிகரமாக 15 சீசன்களை நிறைவு செய்துள்ளது. அனைத்து நாடுகளின் முன்னணி வீரர்களும் ஐபிஎல் தொடரில் விளையாடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த ஆண்டு 8 அணிகளோடு விளையாடப்பட்டு வந்த ஐபிஎல் தொடரில் இந்த ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் சேர்க்கப்பட்டன.
இதனால் 2022 ஐபிஎல் சீசனில் மொத்தம் 74 போட்டிகள் நடைபெற்றன. இதை தொடர்ந்து 2023-2027 காலகட்டத்திற்கான ஐந்தாண்டு ஒளிபரப்பு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக பிசிசிஐ-க்கு ரூ. 48 ஆயிரத்து 390 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
இதனால் தற்போது ஐபிஎல் தொடர் உலகின் இரண்டாவது மிகவும் மதிப்புமிக்க விளையாட்டு லீக் தொடராக உருவெடுத்துள்ளது. இந்த நிலையில் வரும் ஆண்டுகளில் ஐபிஎல் தொடரில் போட்டிகளை அதிகரிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.