
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் தென் ஆப்பிரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் 07ஆம் தேதி டிரினிடாட்டில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 357 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டாக, அதன்பின் முதல் இன்னிங்ஸை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 233 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் 154 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த தென் ஆப்பிரிக்க அணியானது 173 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்து, விண்டீஸ் அணிக்கு 298 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
இதனையடுத்து கடின இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது இலக்கை எட்டாவிட்டாலும், ஐந்தாம் நாள் முடிவுவரை விக்கெட்டை பாதுகாத்ததுடன், 5 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்களைச் சேர்த்தது. இதன்மூலம் இப்போட்டியானது முடிவு எட்டப்படாமல் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. மேற்கொண்டு இப்போட்டியில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய கேசவ் மஹாராஜ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.