
ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், ஸ்காட் எட்வர்ஸ்ட் தலைமையிலான நெதர்லாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தினர். அதன்படி இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியானது முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தது.
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது நெதர்லாந்து அணியின் பந்துவீச்சை சிதறடித்து 50 ஓவர்களில் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 399 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா அணி சார்பாக அதிகபட்சமாக டேவிட் வார்னர் 104 ரன்களையும், மேக்ஸ்வெல் 106 ரன்களையும் குவித்து அசத்தினர்.
பின்னர் 400 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நெதர்லாந்து அணியானது ஆஸ்திரேலிய அணியின் சிறப்பான பந்துவீச்சு சமாளிக்க முடியாமல் 21-ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 90 ரன்களில் சுருண்டது. இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி 309 வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்று இந்த தொடரில் தங்களது மூன்றாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி சார்பாக ஆடம் ஜாம்பா 4 விக்கெட்டுகளையும், மிட்சல் மார்ஷ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.