
ஆரம்ப காலங்களில் உலகக் கிரிக்கெட்டில் தனி ஆதிக்கத்தை செலுத்தி வந்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் படிப்படியாக சரிந்து இன்று மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. அந்த அணி தொடர்ச்சியாக டி20 உலகக்கோப்பை மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் உலக கோப்பை இரண்டுக்குமான தகுதிச் சுற்று போட்டிகளில் தோல்வி அடைந்து வெளியேறி இருக்கிறது.
ஜிம்பாப்வே நாட்டில் தற்பொழுது நடந்து வரும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றில் ஜிம்பாப்வே மற்றும் நெதர்லாந்து ஆகிய இரண்டு அணிகளிடமும் லீக் சுற்றில் தோல்வி அடைந்து அதிர்ச்சி அளித்தது. இதற்கு அடுத்து சூப்பர் 6 ரவுண்டுக்கு வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி ஸ்காட்லாந்து மற்றும் இலங்கை ஆகிய அணிகளிடம் தோல்வி அடைந்து பரிதாபமாக ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான வாய்ப்பில் இருந்து வெளியேறியது.
இதற்கு அடுத்து உள்நாட்டில் வலிமையான இந்திய அணிக்கு எதிராக மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாட இருக்கிறது. ஒரு பெரிய தோல்வியை மறந்து உடனடியாக ஒரு பெரிய வலிமையான அணிக்கு எதிராக விளையாட வேண்டிய சூழ்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் இருக்கிறது. இந்தியாவுக்கு எதிராக உள்நாட்டில் முதலில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் வெஸ்ட் இண்டீஸ் விளையாடுகிறது. இதன் முதல் போட்டி டொமினிக்காவில் வருகின்ற 12ஆம் தேதி தேதி நடைபெற இருக்கிறது. நட்சத்திர வீரர்கள் உலகக்கோப்பை தகுதி சுற்றில் இருந்து நாடு திரும்பியிருக்கிறார்கள்.