
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி ஈஸ்ட் லண்டனில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு பிராண்டன் கிங் - கைல் மேயர்ஸ் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தள் அமைத்துக்கொடுத்தனர். இதில் இருவரும் அரைசதம் கடப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிராண்டன் கிங் 30 ரன்களிலும், கைல் மேயர்ஸ் 36 ரன்களிலும் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஷமாரா ப்ரூக்ஸ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் ஷாய் ஹோப் - நிக்கோலஸ் பூரன் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் பூரன் 39 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கி அதிரடியாக விளையாடிய ரோவ்மன் பாவெல் 46 ரன்களில் தனது விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.