ஒரு சீனியர் வீரராகவும் நான் ஏமாற்றிவிட்டேன் - கிரேக் பிராத்வைட்!
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஒரு பேட்ஸ்மேனாக நானும் தோல்வியடைந்ததே விரக்தியாக இருப்பதாக வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் கிரேக் பிராத்வெயிட் தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியடைந்துள்ளது. சொந்த மண்ணில் நடைபெற்ற போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்திருப்பது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக மாறியுள்ளது. ஏற்கனவே உலகக்கோப்பை தகுதிச்சுற்றில் தோல்வியடைந்து வெளியேறிய சோகத்தில் வெஸ்ட் இண்டீஸ் ரசிகர்கள் இருந்த நிலையில், இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் தோல்வி மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் இரு இன்னிங்ஸ்களிலும் மோசமாக பேட்டிங் செய்ததே காரணமாக அமைந்துள்ளது. முதல் இன்னிங்ஸில் 150 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 130 ரன்களும் மட்டுமே சேர்த்தது அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணம். அதுமட்டுமல்லாமல் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஒரு பேட்ஸ்மேன் கூட அரைசதம் அடிக்கவில்லை. இது வெஸ்ட் இண்டீஸ் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Trending
இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் கிரேக் பிராத்வையிட் பேசுகையில், “டோமினிக்கா மக்களுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். முதல் நாளில் இருந்தே எங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. எங்கள் அணியின் பேட்டிங் சொதப்பலாக அமைந்தது. இத்தனைக்கும் பிட்சில் அந்த அளவிற்கு பந்து ஸ்பின் கூட ஆகவில்லை. இதில் நான் பேட்டிங்கில் சொதப்பியதும் எனக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. ஏனென்றால் முன் நின்று அணி வீரர்களை நான் வழிநடத்தி சென்றிருக்க வேண்டும்.
முதல் இன்னிங்ஸில் நாங்கள் அதிக விக்கெட்டுகளை தொடக்கத்திலேயே இழந்துவிட்டோம். ஒரு சீனியர் வீரராகவும் நான் ஏமாற்றிவிட்டேன். அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரையும் எதிர்கொள்வது எளிதல்ல. மிகச்சிறந்த ஃபீல்ட் செட்டை அமைக்கிறார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை எவ்வளவு டிஃபெண்ட் செய்கிறோமோ, அதே அளவிற்கு ரன்கள் சேர்க்க வேண்டும். ஆனால் நாங்கள் எங்களின் திட்டப்படி செயல்படவில்லை. அறிமுக வீரர் அதனேஸை பொறுத்தவரை, சிறந்த தொடக்கமாக இந்த போட்டி அமைந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now