
ஜிம்பாப்வேவியில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற சூப்பர் 6 சுற்றின் 7ஆவது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் - ஓமன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹராரேவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்து ஓமன் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய ஓமன் அணியில் தொடக்க வீரர் ஜதிந்தர் சிங், கேப்டன் அகிப் இலியாஸ் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அதன்பின் ஜோடி சேர்ந்த காஷ்யப் - அயான் கான் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
பின் காஷ்யப் 31 ரன்களுக்கும், அயான் கான் 30 ரன்களுக்கும் என ஆட்டமிழக்க, பிறகு வந்த முகமது நதீம், சந்தீப் கௌத் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். பிறகு இணைந்த ஷோயிப் கான் - சுராஜ் குமார் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அரைசதம் கடந்தும் அசத்தினர்.