
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணியானது தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணியானது வெற்றிபெற்று அசத்தியதுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று (ஆகஸ்ட் 28) டிரினிடாட்டில் உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.
இதனையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ரீஸா ஹென்றிக்ஸ் - ரியான் ரிக்கெல்டன் இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் முதல் நான்கு ஓவர்கள் முடிந்த நிலையில், மழை குறுக்கிட்டத்தன் காரணமாக இப்போட்டியானது தடைபட்டது. பின்னர் மழை தொடர்ந்து நீடித்ததன் காரணமாக இப்போட்டியானது 13 ஓவர்கள் கொண்ட போட்டியாக மீண்டும் தொடங்கியது. அதன்படி ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ரீஸா ஹென்றிக்ஸ் 9 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஐடன் மார்க்ரமும் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 20 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் களமிறங்கிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அதிரடியாக விளையாடியதுடன், அடுத்தடுத்து பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பறக்கவிட்டு அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். அதேசமயம் மற்றொரு தொடக்க வீரரான ரியான் ரிக்கெல்டன் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 27 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 5 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 40 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதனால் தென் ஆப்பிரிக்க அணியானது 13 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்களைச் சேர்த்தது.