
வெஸ்ட் இண்டீஸ் அணி தற்சமயம் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி டி20 தொடரில் நடந்து முடிந்துள்ள 3 போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று 3-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றுள்ளது.
இதனைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடரின் 4ஆவது டி20 போட்டியானது நாளை (நவ.17)செயின்ட் லூசியாவில் உள்ள டேரன் சமி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இங்கிலாந்து அணி ஏற்கெனவே டி20 தொடரை வென்றுள்ள நிலையில், இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரில் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும். இதனால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இதனைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணியானது அடுத்ததாக வங்கதேச அணியுடன் சொந்த மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் நவம்பர் 22ஆம் தேதியும், ஒருநாள் தொடரானது டிசம்பர் 8ஆம் தேதி முதலும் டி20 தொடரானது டிசம்பர் 15ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது.