
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதையடுத்து இத்தொடரை முடித்த கையோடு வெஸ்ட் இண்டீஸ் அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியானது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் கிரேய்க் பிராத்வைட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியில் வேகப்பந்து வீச்சாளர் அல்ஸாரி ஜோசப் துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த அணியில் கீமார் ரோச், ஜெய்டன் சீல்ஸ், அலிக் அதானாஸ், ஜோஷுவா டா சில்வா, குடகேஷ் மோட்டி உள்ளிட்ட நட்சத்திர வீரர்களுடன் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தனது அறிமுக டெஸ்ட் தொடரிலேயே அசத்திய ஷமார் ஜோசப்பிற்கும் அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.
மேற்கொண்டு காயம் காரணமாக நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியிலிருந்து விலகிய அனுபவ ஆல் ரவுண்டர் ஜேசன் ஹோல்டர், இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பிடித்துள்ளார். அதசமயம் ஆஸ்திரேலிய தொடரில் சொதப்பிய டேகனரின் சந்தர்பாலுக்கு பதிலாக இளம் வீரர் மிகைல் லூயிஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.