
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 7ஆவது லீக் போட்டியில் வங்கதேசத்தை நடப்பு சாம்பியன் இங்கிலாந்து 137 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து முதல் வெற்றியை பதிவு செய்தது. இமாச்சலப்பிரதேசத்தில் இருக்கும் அழகான தரம்சாலா நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து வழக்கம் போல அதிரடியாக விளையாடி 50 ஓவரில் 364/9 ரன்கள் சேர்த்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக டேவிட் மாலன் சதமடித்து 140, ஜானி பேர்ஸ்டோ 52, ஜோ ரூட் 82 ரன்கள் என டாப் 3 பேட்ஸ்மேன்கள் தேவையான ரன்களை குவித்த நிலையில் வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக மெஹதி ஹசன் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
அதை தொடர்ந்து 365 ரன்களை துரத்திய வங்கதேசத்திற்கு துவக்க வீரர் லிட்டன் தாஸ் அதிரடியாக 76 ரன்கள் எடுத்த போதிலும் தன்ஸித் ஹசன் 1, நஜூமுள் சாண்டோ 0, கேப்டன் சாகிப் 1, மெஹதி ஹசன் 8 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர். அதனால் மிடில் ஆர்டரில் முஸ்பிக்கூர் ரஹீம் 51, தவ்ஹித் ஹிரிடாய் 39 ரன்கள் எடுத்தும் 48.2 ஓவரில் 227 ரன்களுக்கு ஆல் அவுட்டான வங்கதேசம் தங்களின் முதல் தோல்வியை சந்தித்தது.