
வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சதமடிக்கும் வரை சென்று ரசிகர்களிடம் தனி கவனத்தை ஈர்த்துள்ளவர் ஷிகர் தவான் தான்.
இந்தியாவின் முதன்மை ஓப்பனராக இருந்த ஷிகர் தவான் 2019ஆம் ஆண்டுக்கு பிறகு வாய்ப்புகள் குறைந்துக்கொண்டே இருந்தன. அவரின் இடத்திற்கு கே.எல்.ராகுல், இஷான் கிஷான், சுப்மன் கில் என பல இளம் வீரர்கள் வந்ததால் தவான் 3 வடிவ கிரிக்கெட்டில் இருந்தும் ஒதுக்கப்பட்டார். ஆனால் திடீரென இலங்கை தொடருக்கு அழைக்கப்பட்ட தவான், மீண்டும் பெரிய இடைவேளைக்கு பிறகு இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அழைக்கப்பட்டுள்ளார்.
எனினும் இந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி வரும் ஷிகர் தவான் தொடர்ச்சியாக ரன் வேட்டை நடத்தி வருகிறார். வெஸ்ட் இண்டீஸுடனான முதல் போட்டியில் கூட 99 பந்துகளில் 97 ரன்களை அடித்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். இதனால் அடுத்தடுத்த போட்டிகளில் தவான் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.