மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் தொடர்ந்து விளையாடுவது கடினம் - ஜஸ்ப்ரித் பும்ரா!
மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் தொடர்ந்து விளையாடுவது கடினம் என இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா கூறியுள்ளார்.
இந்திய அணி இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. 5-வது டெஸ்டில் தோற்ற இந்திய அணி, டி20 தொடரை 2-1 என வென்றது. ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.
லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்று ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது இந்திய அணி. இங்கிலாந்து அணி பும்ராவின் அற்புதமான பந்துவீச்சில் வீழ்ந்தது. அந்த அணி, 25.2 ஓவர்களில் 110 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கேப்டன் ஜாஸ் பட்லர் அதிகபட்சமாக 30 ரன்கள் எடுத்தார். 7.2 ஓவர்கள் வீசி 19 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகள் எடுத்தார் பும்ரா.
Trending
இதையடுத்து இந்திய அணி 18.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 114 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் முதல் ஒருநாள் ஆட்டத்தை வென்றது. ரோஹித் சர்மா 76, ஷிகர் தவன் 31 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். 2ஆவது ஒருநாள் ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை நடைபெறுகிறது.
இந்நிலையில் இப்போட்டியில் 6 விக்கெட்களை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு துருப்புச் சீட்டாக இருந்த ஜஸ்ப்ரித் பும்ரா செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் தொடர்ந்து விளையாடுவது கடினம். இப்போதுதான் டெஸ்ட் விளையாடி முடித்து உடனடியாக டி20 தொடரில் விளையாடி இப்போது ஒருநாள் தொடரில் விளையாடுகிறோம். எனவே அதற்கேற்றாற்போல ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்கவேண்டும்.
உங்கள் உடலைக் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். சில நேரங்களில் வழக்கமான 8 மணி நேர தூக்கத்துக்குப் பதிலாக 9, 10 மணி நேரம் தூங்க வேண்டியிருக்கும். வேகப்பந்து வீச்சு என்பது கடினமான வேலை. உடலை நோகச் செய்யும். அதனால் அடுத்த ஆட்டத்துக்குள் எவ்வித வலியிலிருந்தும் மீள்வது முக்கியம்.
தொழில்முறையில் கிரிக்கெட் விளையாடும் அனைவரும் இந்தச் சூழலை ஏற்றுக்கொள்ள வேண்டும். நாங்கள் எல்லோரும் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்றுதான் கனவு கண்டோம். எனவே இதுகுறித்துப் புகார் இல்லை.
மேலும் பயண அலைச்சலும் உண்டு. எனவே நல்ல உடற்தகுதியுடன் விளையாடுவது சவாலானது. எங்களால் எதைக் கட்டுப்படுத்த முடியுமோ அதைக் கட்டுப்படுத்துகிறோம்” என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now