
இலங்கைக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் விளையாடும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் மார்ச் 4 மற்றும் 12 ஆகிய தேதிகளில் மொஹாலி மற்றும் பெங்களூரு ஆகிய மைதானங்களில் நடைபெற உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் இந்த தொடரில் பங்கேற்பதற்காக புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி மொஹாலியில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
முன்னதாக இந்த தொடருக்காக கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட 18 பேர் கொண்ட இந்திய அணியில் கடந்த சில வருடங்களாக ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் திணறி வந்த மூத்த வீரர்கள் அஜிங்கிய ரஹானே மற்றும் புஜாரா ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டார்கள். அவர்களுடன் மூத்த விக்கெட் கீப்பர் ரித்திமான் சஹா மற்றும் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா ஆகியோரையும் இந்திய அணி நிர்வாகம் கழற்றி விட்டது. ஏற்கனவே 35 வயதை கடந்துவிட்ட இவர்கள் சமீப காலங்களாக சிறப்பாக செயல்பட தவறியதால் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து தரமான இந்திய அணியை உருவாக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்வு குழு அறிவித்துள்ளது.
இதில் 37 வயதை கடந்துள்ள அனுபவம் மூத்த விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா நீக்கப்பட்டது பெரிய சர்ச்சையாக வெடித்தது. ஏனெனில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வண்ணம் இலங்கை தொடர் மட்டுமல்லாது இனி இந்திய அணியில் எப்போதுமே வாய்ப்பு இல்லை என தேர்வு குழு தலைவர் சேட்டன் சர்மா தம்மிடம் தெரிவித்ததாக கடந்த வாரம் சஹா கூறினார். இருப்பினும் நான் பிசிசிஐயில் இருக்கும்வரை இந்திய அணியில் உனக்கு இடம் இருக்கும் என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி ஆதரவு தெரிவித்த போதிலும் அதே காரணத்துக்காக அணியில் இடம்பிடித்து இருக்கும்போதே கௌரவத்துடன் ஓய்வு பெறுவது பற்றி சிந்திக்குமாறு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியதாகவும் அவர் வேதனையில் புலம்பினார்.