
ஆசிய கண்டத்தின் பரம எதிரிகளாக திகழும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லை பிரச்சனை காரணமாக கடந்த 10 வருடங்களாக இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் மோதுவதை ஆசிய கோப்பை மற்றும் ஐசிசி உலகக் கோப்பைகளில் மட்டுமே விளையாடி வருகின்றன. அதனால் இப்போதெல்லாம் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே இவ்விரு அணிகள் மோதுவதால் அதை பார்ப்பதற்கு இருநாட்டு ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலக அளவில் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
மேலும் அண்டை நாடுகளாக இருப்பதால் இவ்விரு அணிகளும் கிரிக்கெட்டை போட்டியாக பார்க்காமல் கௌரவமாக கருதி வெற்றி பெறுவதற்காக ஆக்ரோசத்துடன் மோதிக்கொள்வார்கள். அதனால் அனல் பறக்கும் என்பதாலேயே இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிகள் உலக அளவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் போட்டியாக இருக்கிறது. அந்த வரிசையில் இந்த வருடம் 2023 ஆசிய மற்றும் ஒருநாள் உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவிருப்பது அனைவரிடமும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
குறிப்பாக பல சர்ச்சைகளை கடந்து பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய 2 நாடுகளில் நடைபெறும் 2023 ஆசிய கோப்பையில் இவ்விரு அணிகளும் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் லீக் சுற்றில் 1 முறை, சூப்பர் 4 சுற்றில் 1 முறை, ஃபைனல் என ஒரே மாதத்தில் 3 போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. அதுபோக ஒருநாள் உலகக்கோப்பையில் அக்டோபர் 14ஆம் தேதி அஹமதாபாத் மைதானத்தில் இந்தியா – பாகிஸ்தான் மோதுவதும் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.