
இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் இந்திய அணி முதல் போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்றாலும், 2ஆவது போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது. அதனால் சமனில் இருக்கும் இத்தொடரை வெல்ல இன்று நடைபெறும் கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களமிறங்குகிறது.
முன்னதாக புனே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 2ஆவது போட்டியில் இளம் வீரர் அர்ஷ்தீப் வெறும் 12 பந்துகளில் ஹாட்ரிக் நோ-பால்கள் உட்பட 5 நோ-பால்களை வீசி 37 ரன்களை வாரி வழங்கியது தோல்விக்கு முக்கிய பங்காற்றியது. பொதுவாகவே கிரிக்கெட்டில் நோபால் போடுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என வல்லுனர்கள் தெரிவிப்பார்கள். அப்படிப்பட்ட நிலையில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஹாட்ரிக் நோ-பால்களை வீசிய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனை படைத்த அவர், ஒரு போட்டியில் அதிக நோ-பால் வீசிய பந்துவீச்சாளர் மற்றும் ஒட்டுமொத்தமாக அதிக நோ-பால் வீசிய பவுலர் என்ற இரட்டை உலக சாதனைகளை படைத்தார்.
முன்னதாக இத்தொடரின் முதல் போட்டியில் லேசான காயத்தை சந்தித்த அவர் போதியளவு முதன்மை கிரிக்கெட்டில் விளையாடாமல் நேரடியாக 2வது போட்டியில் தேர்வு செய்யப்பட்டு விளையாடியது இந்த தடுமாற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது. அத்துடன் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலகக் கோப்பை அதிக விக்கெட்களை எடுத்த இந்திய பந்துவீச்சாளராக சாதனை படைத்த அவர் அதன் பின் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் விளையாடினார். ஆனால் அதன் பின் சுமார் 2 மாதங்களாக எவ்வித உள்ளூர் கிரிக்கெட்டிலும் விளையாடாத அவர் தற்போது நேரடியாக விளையாடியதே இந்த தடுமாற்றத்திற்கு முழுமுதற் காரணமாக அமைந்தது.