
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டியில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த இந்தியா 3ஆவது போட்டியில் வென்று தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைத்துள்ளது. 2024 டி20 உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இந்த தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற சீனியர்கள் இல்லாத நிலைமையில் சிறப்பாக செயல்பட வேண்டிய இஷான் கிசான், சஞ்சு சாம்சன் போன்ற இளம் வீரர்கள் முதலிரண்டு போட்டிகளில் சுமாராக செயல்பட்டு 2016க்குப்பின் வெஸ்ட் இண்டீஸிடம் அடுத்தடுத்த தோல்விகளை இந்தியா சந்திக்க காரணமாக அமைந்தனர்.
அப்படி சுமாராக செயல்பட்ட இளம் வீரர்களில் ஷுப்மன் கில் இந்த சுற்றுப்பயணம் முழுவதுமே சொதப்பி வருவது ரசிகர்களுக்கு வியப்பாகவும் ஏமாற்றமாகவும் இருக்கிறது என்றே சொல்லலாம். ஏனெனில் 2018 அண்டர்19 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் தொடர் நாயகன் விருது வென்று சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் 2021ஆம் ஆண்டு மறக்க முடியாத காபா வெற்றியில் 91 ரன்கள் அடித்து 2022 ஐபிஎல் தொடரில் முதல் சீசனிலேயே குஜராத் கோப்பையை வெல்லும் அளவுக்கு சிறப்பாக செயல்பட்டார்.
அதே வேகத்தில் கடந்த வருடம் நடைபெற்ற அனைத்து வகையான தொடர்களிலும் சிறப்பாக அசத்திய அவர் நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமும், டி20 கிரிக்கெட்டில் சதமும் விளாசினார். மேலும் ஐபிஎல் 2023 தொடரில் ஆரஞ்சு தொப்பியை வென்ற அவர் சச்சின், விராட் கோலி வரிசையில் இந்திய பேட்டிங் துறையின் அடுத்த சூப்பர்ஸ்டாராக உருவெடுத்துள்ளதாக அனைவரும் பாராட்டினர்.