
வங்கதேச அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 201 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதனைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஜமைக்காவில் இன்று தொடங்கியது. மழை காரணமாக தாமதமாக தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணிக்கு மஹ்முதுல் ஹசன் ஜாய் மற்றும் ஷாத்மன் இஸ்லாம் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் மஹ்முதுல் ஹசன் ஜாய் 3 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளிக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மொமினுல் ஹக்கும் ரன்கள் ஏதுமின்றி கீமார் ரோச் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதனால் வங்கதேச அணி 10 ரன்களிலேயே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின் ஷாத்மனுடன் இணைந்த ஷஹாதத் ஹொசைன் திபு நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தார்.