
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் கைல் மேயர்ஸ் - பிராண்டன் கிங் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் மேயர்ஸ் 17 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன், ஷாய் ஹோப், ஹெட்மையர் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
அதன்பின் இணைந்த பிராண்டன் கிங் - கேப்டன் ரோவ்மன் பாவெல் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். பின் ரோவ்மன் பாவெல் 3 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 50 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஆண்ட்ரே ரஸலும் 14 ரன்களுக்கும் விக்கெட்டை இழந்தனர்.