WI vs IND, 2nd Test: வலிமையான நிலையில் இந்தியா; நிதானம் காட்டும் விண்டீஸ்!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 86 ரன்களைச் சேர்த்துள்ளது.
வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. முதலாவது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பிராத்வெய்ட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மாவும், யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். இதில் ஜெய்ஸ்வால் 57 ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த சுப்மன் கில் 10 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளிக்க, சிறிது நேரத்தில் கேப்டன் ரோஹித் சர்மாவும் 80 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
Trending
அடுத்ததாக விராட் கோலியுடன் ரஹானே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் ரஹானே 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து விராட் கோலியுடன் ரவீந்திர ஜடேஜா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியின் சீரான ஆட்டத்தால் அணியின் ரன் ரேட் மெதுவாக உயர்ந்தது. இந்த ஜோடியில் விராட் கோலி அரை சதத்தை பதிவு செய்து அசத்தினார். பின்னர் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 84 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து விராட் கோலி 87 ரன்களுடனும், ஜடேஜா 36 ரன்களளுடனும் இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் தனது 76ஆவது சதத்தை பதிவுசெய்து அசத்தினார். அவரைத் தொடர்ந்து ரவீந்திர ஜடேஜாவும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
அதன்பின் 121 ரன்களை எடுத்திருந்த விராட் கோலி எதிர்பாராத விதமாக ரன் அவுட்டாகி பெவிலியனுக்கு திரும்ப, மறுமுனையில் 61 ரன்களை எடுத்திருந்தது ரவீந்திர ஜடேஜாவும் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய இஷான் கிஷன் 25 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இறுதிவரை களத்தில் இருந்த ரவிச்சந்திரன் அஸ்வின் 56 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இதன்மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 438 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கீமார் ரோச், வாரிகன் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் கிரேக் பிராத்வைட் - டெக்நரைன் சந்தர்பால் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இதில் டெக்நரைன் சந்தர்பால் 33 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, பின்னர் வந்த மெக்கன்ஸி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன்மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 86 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் பிராத்வைட் 37 ரன்களையும், மெக்கன்ஸி 14 ரன்களையும் சேர்த்துள்ளனர்.
Win Big, Make Your Cricket Tales Now