விதியை மீறிய நிக்கோலஸ் பூரன்; அபராதம் விதித்தது ஐசிசி!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியின் போது நடுவர்களின் தீர்ப்பை விமர்சித்ததாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரனுக்கு ஐசிசி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் இதுவரை நடைபெற்ற முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் 2 – 0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று சமீபத்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் சந்தித்த தோல்விகளுக்கு பதிலடி கொடுத்துள்ளது. குறிப்பாக தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்தியாவுக்கு எதிராக 2016-க்குப்பின் முதல் முறையாக அடுத்தடுத்த டி20 போட்டிகளில் வென்றுள்ள அந்த அணி டி20 கிரிக்கெட்டில் இன்னும் நாங்கள் வீழ்ந்து விடவில்லை என்பதை நிரூபித்துள்ளது.
மறுபுறம் ரோஹித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் இல்லாத நிலைமையில் 2024 டி20 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களுடன் களமிறங்கிய இந்தியா முதல் போட்டியில் 150 ரன்களை கூட சேசிங் செய்ய முடியாமல் தோற்ற நிலையில் 2வது போட்டியிலும் 152 ரன்கள் மட்டுமே எடுத்து அடுத்தடுத்த அவமான தோல்விகளை சந்தித்துள்ளது. அதனால் இத்தொடரின் கோப்பையை வென்று தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபிக்க எஞ்சிய 3 போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களமிறங்க உள்ளது.
Trending
முன்னதாக இந்த தொடரின் முதல் போட்டியில் 41 ரன்கள் எடுத்து வெற்றியில் முக்கிய பங்காற்றிய வெஸ்ட் இண்டீஸ் நம்பிக்கை நட்சத்திர வீரர் நிக்கோலஸ் பூரான் 2ஆவது போட்டியில் 67 ரன்களை விளாசி இந்தியாவை வீழ்த்துவதற்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதையும் வென்றார். குறிப்பாக தற்சமயத்தில் நல்ல ஃபார்மில் இருக்கும் அவர் 6 பவுண்டரி 4 சிக்ஸரையும் அடித்து இந்தியாவுக்கு எதிராக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள், அதிக சிக்ஸர்கள், அதிக அரை சதங்கள் அடித்த வீரர் என்ற 3 சாதனைகளையும் படைத்தார்.
முன்னதாக கயானாவில் நடைபெற்ற 2ஆவது போட்டியில் நடுவர்களை பொது வெளியில் விமர்சித்தற்காக நிக்கோலஸ் பூரானுக்கு போட்டி சம்பளத்திலிருந்து 15% அபராதமாக விதிக்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது. அதாவது அந்தப் போட்டியில் முதலில் இந்தியா பேட்டிங் செய்து கொண்டிருந்த போது 4ஆவது ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணியினர் எல்பிடபுள்யூ முறையில் அவுட் கேட்டனர். அப்போது நடுவர் அவுட் கொடுக்காத நிலைமையில் நிச்சயமாக அது அவுட்டாக இருக்கும் என்று கருதிய நிக்கோலஸ் பூரான் ரிவியூ எடுக்குமாறு விமர்சித்தார்.
அப்படி நடுவர் வழங்கிய தீர்ப்புக்கு அதிருப்தியை வெளிப்படுத்தி வெளிப்படையாக விமர்சித்து 2.7 லெவல் 1 அடிப்படை விதிமுறையை மீறிய காரணத்திற்காக அவருக்கு அபராதத்துடன் ஒரு கேரியர் கருப்பு புள்ளியும் தண்டனையாக வழங்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது. பொதுவாக லெவல் 1 விதிமுறையை மீறும் போது குறைந்தபட்சம் 50% போட்டி சம்பளத்திலிருந்து அபராதமாகவும் 2 புள்ளியையும் தண்டனையாக கொடுக்கப்படுவது வழக்கமாகும்.
ஆனால் கடந்த 24 மாதங்களில் எந்த விதிமுறை மீறல்களும் செய்யாத அவர் முதல் முறையாக தற்போது தான் விதிமுறை மீறியுள்ளதால் அந்த தண்டனை பாதியாக தளர்த்தப்பட்டுள்ளதாகவும் ஐசிசி தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் நடுவர்களை விமர்சித்ததை நிக்கோலஸ் பூரான் ஒப்புக்கொண்டதால் மேற்கொண்டு எந்த விதமான விசாரணையும் நடத்தப்படாது என்றும் ஐசிசி கூறியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now