
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணியானது தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது இன்று டிரினிடாட்டில் உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து வெஸ்ட் இண்டீஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அலிக் அதானாஸ் - ஷாய் ஹோப் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்ததுடன், அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக்கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 41 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அலிக் அதானாஸ் 28 ரன்களில் நடையைக் கட்ட, அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான ஷாய் ஹோப்பும் 2 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 41 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். பின்னர் களமிறங்கிய ரோஸ்டன் சேஸ், நிக்கோலஸ் பூரன் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
இதனையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் ரோவ்மன் பாவெல் - ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். இதில் ரோவ்மன் பாவெல் 35 ரன்களுக்கும், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் 29 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, வெஸ்ட் இண்டீஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்தாலும் 179 ரன்களைச் சேர்த்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய லிசாத் வில்லியம்ஸ் 3 விக்கெட்டுகளையும், பேட்ரிக் க்ரூகர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.