
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கயானாவில் உள்ள புராவிடன்ஸ் மைதானத்தில் ஆகஸ்ட் 15ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணி தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 160 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக டேன் பீட் 38 ரன்களையும், டேவிட் பெட்டிங்ஹாம் 28 ரன்களையும் சேர்த்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஷமார் ஜோசப் 5 விக்கெட்டுகளையும், ஜெய்டன் சீல்ஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியும் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணியானது முதல் இன்னிங்ஸில் 144 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜேசன் ஹோல்டர் 54 ரன்களைச் சேர்த்தார். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் வியான் முல்டர் 4 விக்கெட்டுகளையும், நந்த்ரே பர்கர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு டோனி டி ஸோர்ஸி மற்றும் ஐடன் மார்க்ரம் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து தொடக்கம் முதலே பொறுபுடன் விளையாடியதுடன் முதல் விக்கெட்டிற்கு 79 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். பின்னர் அரைசதத்தை நெருங்கிய டோனி டி ஸோர்ஸி 39 ரன்களில் விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான ஐடன் மார்க்ரம் அரைசதம் கடந்த நிலையில் 51 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கேப்டன் டெம்பா பவுமா 4 ரன்களிலும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 24 ரன்களிலும், டேவிட் பெட்டிங்ஹாம் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.