
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் ஜூன் மாதம் முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக பங்கேற்கும் அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அதன்படி இத்தொடருக்கு தயாராகும் வகையில் தென் ஆப்பிரிக்க அணியானது வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது இன்று ஜமைக்காவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு டி காக் - ரீஸா ஹென்றிக்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஹென்றிக்ஸ் 6 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ரியான் ரிக்கெல்டன் 18 ரன்களிலும், குயின்டன் டி காக் 19 ரன்களிலும், மேத்யூ பிரீட்ஸ்கி 5 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.