
West Indies vs South Africa Dream11 Prediction 1st T20I: வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணியானது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்துமுடிந்த டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணியானது 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி வென்றது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியானது நாளை மறுநாள் (ஆகஸ்ட் 24) டிரினிடாட்டில் உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இவ்விரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதன்படி தென் ஆப்பிரிக்க அணியானது நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியிடம் தோல்வியைத் தழுவியதுடன் கோப்பை வெல்லும் வாய்ப்பையும் தவறவிட்டது. அதன்பின் தென் ஆப்பிரிக்க அணி விளையாடவுள்ள முதல் சர்வதேச டி20 தொடர் இது என்பதால் அந்த அணி மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. மேற்கொண்டு அணியில் நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக அது அணிக்கு எந்தளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
மறுபக்கம் ரோவ்மன் பாவெல் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு பிறகு முதல் சர்வதேச டி20 தொடர் இது என்பதால் அந்த அணி மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. மேற்கொண்டு இத்தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஆண்ட்ரே ரஸர், ஜேசன் ஹோல்டர், பிராண்டன் கிங் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் ஜான்சன் சார்லஸ், ஷமார் ஜோசப், நிக்கோலஸ் பூரன், ஷிம்ரான் ஹெட்மையர் போன்ற டி20 வீரர்கள் அணியில் இடம்பிடித்திருப்பது அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது.