
ஐபிஎல் தொடர் மூலமாக இந்திய அணிக்குக் கிடைத்த வீரர்களில் முக்கியமானவர் ரிஷப் பந்த். ஐபிஎல் தொடரில் தனது அதிரடி பேட்டிங் மூலமாக கவனம் ஈர்த்த பந்த், உடனடியாக இந்திய அணியில் இடம்பிடித்தார். தோனியின் ஓய்வுக்குப் பிறகு இந்திய அணியின் மூன்று வடிவிலான போட்டிகளிலும் நிரந்தர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக கலக்கி வருகிறார்.
பந்த் போன்ற அதிரடி வீரர்கள் லிமிடெட் ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடினாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவ்வாளவாக சோபிப்பதில்லை. ஆனால் பந்த் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடி பல போட்டிகளில் வெற்றியைப் பெற்றுத்தந்துள்ளார். குறிப்பாக ஆஸி மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிராக சமீபத்தில் நடந்த போட்டிகளில் நான்காவது இன்னிங்ஸ்களில் அவரின் சிறப்பான ஆட்டம் டெஸ்ட் கிரிக்கெட் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்தியா சார்பாக முதல் முதலாக ஐசிசி மாதத்தின் சிறந்த வீரருக்கான விருதைப் பெற்ற வீரராக பாந்த் இருக்கிறார்.
கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக விளையாடி வரும் பந்த் , 2 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். கடந்த ஆண்டு டெல்லி அணியை இறுதிப் போட்டிவரை தன் தலைமையில் அழைத்துச் சென்றார். இப்போது ஐபிஎல் அணியைத் தலைமை தாங்குபவர்களில் இளம் வயது கேப்டனாக ரிஷப் பந்த் இருக்கிறார்.