
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர அதிரடி தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் கடந்த 2009ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி ஆஸ்திரேலியா அணிக்காக இதுவரை 111 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 8695 ரன்கள் குவித்துள்ளார். அதுமட்டும் இன்றி ஒருநாள் போட்டிகளில் 161 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் 6932 ரன்களையும் குவித்திருக்கிறார்.
இது தவிர்த்து டி20 கிரிக்கெட் போட்டிகளில் 99 ஆட்டங்களில் விளையாடி 2894 ரன்களை குவித்துள்ளார். இந்நிலையில் 37 வயதாகும் டேவிட் வார்னர் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் நடப்பு டெஸ்ட் கிரிக்கெட் தொடரோடு ஓய்வு பெறுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். அந்த வகையில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியானது சிட்னியில் நாளை நடைபெறவுள்ளது.
இந்த டெஸ்ட் போட்டியே அவர் விளையாடும் கடைசி போட்டியாக அமைய உள்ளது. அதேபோன்று ஏற்கனவே இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்னதாகவே அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டார். அதனை தொடர்ந்து டி20 போட்டிகளில் இன்னும் சில ஆண்டுகள் கவனம் செலுத்த இருப்பதாகவும் அவர் விருப்பம் தெரிவித்திருந்தார்.