
இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் தொடரானது வெற்றிகரமாக 17 சீசன்களை கடந்து, 18ஆவது சீசனில் அடியெடுத்து வைக்க தொடங்கியுள்ளது. இதனையடுத்து எதிர்வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனானது மார்ச் மாதம் முதல் தொடங்கவுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் 18ஆவது சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலமானது சமீபத்தில்சௌதீ அரேபியாவில் உள்ள ஜித்தா நகரில் நடைபெற்றது. இதில் மொத்தம் 574 வீரர்கள் பங்கேற்றிருந்தனர்.
அந்தவகையில் நடைபெற்று முடிந்த இந்த மெகா ஏலத்தில் இந்திய வீரர் ரிஷப் பந்தை ரூ.27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் எனும் சாதனையை ரிஷப் பந்த் படைத்துள்ளார். இதனால் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸின் கேப்டனாகவும் ரிஷப் பந்த் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்திருந்தன.
இந்நிலையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கோப்பையை வெல்வதற்காக என்னுடைய 200 சதவீத உழப்பை கொடுப்பேன் என்று தற்போது கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.