Advertisement

கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் ரன்களை குவிக்க வேண்டும்  - குயின்டன் டி காக்!

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் நாங்கள் வெற்றி பெற்றிருந்தாலும் இன்னும் நீண்ட பயணம் எங்களுக்கு இருக்கிறது என்று தென் ஆப்பிரிக்க வீரர் குயின்டன் டி காக் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan October 13, 2023 • 12:49 PM
கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் ரன்களை குவிக்க வேண்டும்  - குயின்டன் டி காக்!
கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் ரன்களை குவிக்க வேண்டும்  - குயின்டன் டி காக்! (Image Source: Google)
Advertisement

உலகக்கோப்பை கிரிக்கெட்தொடரில் நேற்று லக்னோவில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்ட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென் ஆப்பிரிக்க அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. அதோடு அவர்களது இந்த வெற்றியின் மூலம் தற்போது தென் ஆப்பிரிக்க அணி இந்த உலகக்கோப்பை தொடரின் புள்ளி பட்டியலிலும் ரன் ரேட் அடிப்படையில் இரண்டு வெற்றிகளுடன் முதல் இடத்திற்கு சென்றுள்ளது.

அதன்படி நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 311 ரன்களை குவிக்க பின்னர் 312 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 177 ரன்களுக்கு ஆல் அவுட்டானதால் தென் ஆப்பிரிக்கா அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Trending


இந்த போட்டியின் போது தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு உதவிய குவிண்டன் டி காக் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த போட்டியில் 106 பந்துகளை சந்தித்த டி காக் 8 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் என 109 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய டி காக், “இந்த போட்டியில் எங்களது அணியின் வீரர்கள் விளையாடிய விதம் மிகவும் சிறப்பாக இருந்தது. இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்று. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இந்த மைதானம் எப்படி இருக்கும் என்று ஆரம்பத்தில் எங்களுக்கு தெரியவில்லை. அதன்பிறகு களத்தில் சென்று பேட்டிங் செய்யும்போதே சூழ்நிலையை கணித்து மைதானத்தின் தன்மையை அறிந்து எங்களது பேட்டிங்கை வெளிப்படுத்தினோம்.

கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் ரன்களை குவிக்க வேண்டும் என்றே இந்த ஆட்டத்தில் விளையாடினோம். 311 ரன்கள் என்பது இந்த மைதானத்தில் வெற்றிக்கு போதுமான ரன்களை விட அதிகம் என்று நினைக்கிறேன். ஏனெனில் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் நான் இங்கு விளையாடி உள்ளதால் இரண்டாவதாக சேசிங் செய்யும் அணிக்கு இந்த மைதானம் கடினமாக இருக்கும் என்பது எனக்கு தெரியும். 

இருந்தாலும் இந்த மைதானத்தில் சற்று மாற்றம் இருக்கிறது. வெப்பம் அதிகமாக இருந்ததால் சற்று கடினமாகவே இருந்தது. எங்களது பந்துவீச்சாளர்கள் தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்தியதால் ஆஸ்திரேலிய அணி அழுத்தத்திற்கு சென்று இறுதியில் ஆட்டமிழந்தது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் நாங்கள் வெற்றி பெற்றிருந்தாலும் இன்னும் நீண்ட பயணம் எங்களுக்கு இருக்கிறது” என தெரிவித்துள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement