
நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரை நடத்தும் இந்தியா நாளை அரை இறுதியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடுவதால், கிரிக்கெட் களம் பரபரப்பானதாக மாறியிருக்கிறது. அதே சமயத்தில் இந்திய அணி 2019 ஆம் ஆண்டு இதே கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியிடம் உலகக்கோப்பை அரை இறுதியில் தோல்வி அடைந்திருக்கிறது.
இதன் காரணமாக இந்த போட்டிக்கு மேலும் எதிர்பார்ப்பும் சிறிது அச்ச உணர்வும் அதிகமாக இருக்கிறது. ஆனால் இந்திய வீரர்கள் தரப்பில் அவர்கள் மிகுந்த நம்பிக்கை உடன் நேர்மறையான எண்ணத்தில் இருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. இந்நிலையில், இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பை எதிர்கொண்ட நியூசிலாந்து அணியின் கேப்டன் கேப்டன் வில்லியம்சன் பல்வேறு கேள்விகளை எதிர்கொண்டு போட்டி குறித்து பதில் அளித்து இருக்கிறார்.
அப்போது பேசிய அவர், “இந்திய அணி மிகச்சிறப்பாக விளையாடிக்கொண்டிருக்கிறது. அவர்கள் சிறந்த அணி என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியும். ஆனால், தொடரின் இறுதிக்கட்டத்தை எட்டும்போது எல்லாவற்றையும் முதலில் இருந்துதான் தொடங்கியாக வேண்டும். குறிப்பிட்ட அந்த நாளில் எவ்வளவு சிறப்பாகச் செயல்படுகிறோம் என்பதுதான் முக்கியம்.