
உலகக் கோப்பை தொடர் தொடங்க இன்னும் ஒரு சில வாரங்களே உள்ளன. உலகக் கோப்பையில் பங்கேற்கும் 15 பேர் அடங்கிய அணியை அனைத்து அணி நிர்வாகமும் வருகிற செப்டம்பர் 5 ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். அப்படி ஒப்படைக்கும் அணி வீரர்கள் விவரத்தை அணி நிர்வாகம் செப்டம்பர் 27 ஆம் தேதி வரை மாற்றம் செய்து கொள்ளலாம்.
நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவர் கேன் வில்லியம்சன். இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியின் முதல் ஆட்டத்தில் குஜராத் அணியில் விளையாடிய கேன் வில்லியம்சனுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார். அதன்பின் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். ஐபிஎல் தொடர் மட்டுமல்லாது நியூசிலாந்துக்காகவும் அவரால் விளையாட முடியாத சூழல் உருவானது. காயத்திலிருந்து குணமடைந்து வரும் கேன் வில்லியம்சன் உலகக் கோப்பை தொடரில் இடம் பெறுவாரா என்ற கேள்வி எழுந்தது.
மேலும், காயத்திலிருந்து குணமடைந்து வரும் கேன் வில்லியம்சனுக்கு உலகக் கோப்பை தொடரில் கலந்து கொள்வதற்காக நியூசிலாந்து அணி நிர்வாகம் இரண்டு வாரம் அவகாசம் கொடுத்திருந்தது. இந்நிலையில் இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான நியூசிலாந்து அணியில் கேப்டன் கேன் வில்லியம்சன் இடம்பெறுவார் என அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டெட் கூறியுள்ளார்.