
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் கடந்த மார்ச் 31ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கியது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் துவக்க போட்டியில் விளையாடின. போட்டியின் போது பவுண்டரில் நின்று பந்தை தடுக்க முயற்சித்த கேன் வில்லியம்சன் மூட்டு பகுதியில் பலமான காயம் ஏற்பட்டது. மருத்துவர்கள் தோள்பட்டையில் தாங்கியபடி வெளியே அழைத்துச் செல்லும் அளவிற்கு மோசமாகவும் அடிபட்டிருந்தது.
உடனடியாக ஸ்கேன் செய்ய அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சையும் பெற்று வந்தார் கேன் வில்லியம்சன். இரு தினங்களுக்கு பிறகு வெளிவந்த ஸ்கேன் ரிப்போர்ட்டில் கேன் வில்லியம்சன் குணமடைய எவ்வளவு காலம் ஆகலாம் என்று இப்போது ஏதும் சொல்ல இயலாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து ஐபிஎல் தொடரிலிருந்து மொத்தமாக விலகி, உருக்கமாக பேசிய பிறகு நியூசிலாந்து திரும்பினார் கேன் வில்லியம்சன். அங்கு சென்ற பிறகும் காயத்தின் தீவிரம் குறையவில்லை.
மீண்டும் மருத்துவர்களிடம் பரிசோதித்துப் பார்க்கையில், இவரது காயத்திற்கு அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வு என்பது உறுதியானது. அறுவைசிகிச்சை செய்து கொண்டால் குறைந்தது 6 முதல் 8 மாத காலம் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாது என்பதும் அதிர்ச்சிகரமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை செய்து கொண்டால் கேன் வில்லியம்சன் இந்த வருட ஒருநாள் உலகக்கோப்பையில் இடம்பெற முடியாது எனும் கூடுதல் அதிர்ச்சி தகவலும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.