
வங்கதேச மகளிர் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நடந்து முடிந்த முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒருவெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்திருந்தன.
இந்நிலையில் ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று செயின்ட் கிட்ஸில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங் செய்தாவது அறிவித்து களமிறங்கியது. இதையடுத்து களமிறங்கிய அந்த அணியில் முர்ஷிதா கதும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் இணைந்த ஃபர்ஹானா - ஷர்மின் அக்தர் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் ஃபர்ஹானா 22 ரன்னிலும், ஷர்மின் அக்தர் 37 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின் களமிறங்கிய வீராங்கனைகளில் கேப்டன் நிகர் சுல்தானா 11 ரன்னிலும், சோபனா மோஸ்ட்ரி 25 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீராங்கனைகளாலும் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் வங்கதேச மகளிர் அணி 43.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 118 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய கரிஷ்மா ராம்ஹாராக் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.