
WIW vs SAW, 1st T20I: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீராங்கனை டஸ்மின் பிரிட்ஸ் 98 ரன்களைக் குவித்ததுடன் அணியின் வெற்றியிலும் பங்காற்றி ஆட்டநாயகி விருதை வென்றுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்க அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரின் முதல் டி20 போட்டியானது நேற்று பார்படாஸில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி முதலில் பந்துவீசுதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் லாரா வோல்வார்ட் - டஸ்மின் பிரிட்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் டஸ்மின் பிரிட்ஸ் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுபக்கம் லாரா வோல்வார்ட் 9 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய நட்சத்திர வீராங்கனைகள் மரிஸான் கேப் 2 ரன்களுக்கும், நதின் டி கிளார்க் 21 ரன்னிலும், மைன் ஸ்மித் 9 ரன்னிலும், சோலே ட்ரையான் 16 ரன்னிலும், அன்னேரி டெர்க்சன் 5 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். ஒருபக்கம் விக்கெட்டுகள் இழந்திருந்தாலும் மறுமுனையில் தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த டஸ்மின் பிரிட்ஸ் 9 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 98 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார்.