
WIW vs SAW, 3rd ODI: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க வீராங்கனை தஸ்மின் பிரிட்ஸ் சதமடித்து அசத்தியதுடன் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி பார்படோஸில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க் அணிக்கு கேப்டன் லாரா வோல்வார்ட் மற்றும் டஸ்மின் பிரிட்ஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டஸ்மின் பிரிட்ஸ் சதமடித்து அசத்திய நிலையில், லாரா வோல்வார்ட் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். இதன் மூலமாக இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 184 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர்.
அதன்பின் 8 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 101 ரன்களைச் சேர்த்த கையோடு டஸ்மின் பிரிட்ஸ் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 7 பவுண்டரிகளுடன் 75 ரன்களைச் சேர்த்த கையோடு லாரா வோல்வார்ட்டும் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீராங்கனைகளில் மரிஸான் கேப் 34 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் ரன்களைச் சேர்க்க தவறினர். இதனால் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 45.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 278 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதன் காரணமாக முதல் இன்னிங்ஸ் அத்துடன் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.