ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கவுகாத்தியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் லாரா வோல்வார்ட் - தஸ்மின் பிரிட்ஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் தஸ்மின் பிரிட்ஸ் 45 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்து களமிறங்கிய அன்னேக் போஷ் ரன்கள் ஏதுமின்றியும், சுனே லூஸ் ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த மரிஸான் கேப்பும் 42 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அதேசமயம் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய லாரா வோல்வார்ட் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்து அசத்தினார். மேற்கொண்டு இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய அவர் 20 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 169 ரன்களைச் சேர்த்து தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய சோளே டிரையானும் அதிரடியாக விளையாடினார்.
இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சோளே டிரையான் 33 ரன்களையும், நதின் டி கிளார்க் 11 ரன்களையும் சேர்த்தனர். இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 319 ரன்களைக் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் சோஃபி எக்லெஸ்டோன் 4 விக்கெட்டுகளையும், லாரன் பெல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதன்பின் கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் டாப் ஆர்டர் வீராங்கனிகள் ஏமி ஜோன்ஸ், டாமி பியூமண்ட், ஹீதர் நைட் உள்ளிட்டோர் அடுத்தடுத்து ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டுகளை இழந்தனர்.