
ஆஸ்திரேலிய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடிவருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஆஷஸ் டெஸ்ட் போட்டி ஜூன் 23ஆம் தேதி நாட்டிங்ஹாமில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வுசெய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் எல்லிஸ் பெர்ரி மற்றும் அனபெல் சதர்லேண்ட் ஆகியோரது அபார ஆட்டத்தின் மூலம் 473 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக சதர்லேண்ட் 137 ரன்களையும், எல்லிஸ் பெர்ரி 99 ரன்களையும் சேர்த்தனர்.இங்கிலாந்து அணி தரப்பில் சோபி எக்லெஸ்டோன் 5 விக்கெட்டுகளையும், லௌரன் பெல், லௌரன் ஃபிலெர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணில் டாமி பியூமண்ட் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரட்டைசதமடித்து அசத்தினார். இதன்மூலம் இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்த முதல் வீராங்கனை எனும் சாதனையையும் படைத்தார். இதன்மூலம் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 463 ரன்களைச் சேர்த்து, 10 ரன்கள் பின் தங்கியது.