
இங்கிலாந்தில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவும், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றிபெற்று 1-1 என்ற கணக்கில் தொடரில் சமனிலையில் இருந்தன.
இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு அலிசா ஹீலி - பெத் மூனி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அலிசா ஹீலி 16 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய தஹிலா மெக்ராத் 10 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பின் பெத் மூனி, ஆஷ்லே கார்ட்னர் தலா 32 ரன்களையும், எல்லிஸ் பெர்ரி 34 ரன்களையும் சேர்த்தனர்.