
இலங்கை, இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரானது இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில் இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
கொழும்புவில் உள்ள ஆர்.பிரமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் லாரா வோல்வார்ட் மற்றும் தஸ்மின் பிரிட்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தஸ்மின் பிரிட்ஸ் 14 ரன்னிலும், கேப்டன் லாரா வோல்வார்ட் 10 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கரபோ மெசோவும் 6 ரன்களில் நடையைக் கட்டினார். பின்னர் இணைந்த லாரா குட்ஆல் - சுனே லூஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
இருவரும் பொறுப்புடன் விளையாடியதுடன் 4ஆவது விக்கெட்டிற்கு 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட லாரா குட்ஆல் 46 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 31 ரன்களில் சுனே லூஸும் ஆட்டமிழந்தார். அதன்பின் இணைந்த சோலே ட்ரையான் மற்றும் அன்னேரி டெர்க்சன் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சோலே ட்ரையான் 35 ரன்னிலும், அடுத்து களமிறங்கிய நதின் டி கிளார்க், மசபாடா கிளாஸ், நோன்குலுலேகோ மலாபா ஆகியோரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.