WPL 2023: ஆர்சிபி அணியின் மென்டராக சானியா மிர்ஸா நியமனம்!
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வழிகாட்டியாக (Mentor), இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா நியமிக்கப்பட்டுள்ளார்.
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் மார்ச் 4ஆம் தேதி தொடங்கி 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் 5 அணிகள் பங்கேற்கவுள்ளன. மகளிர் பிரீமியர் லீக் 2023க்கான அட்டவணையையும் பிசிசிஐ அறிவித்தது. மும்பை இந்தியன்ஸ் தொடக்க ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸை சந்திக்க உள்ளது.
குஜராத் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் முதல் ஆட்டத்தில் மார்ச் 4ஆம் தேதி மோதுகின்றன. இந்த ஆட்டம் மும்பை டி.ஒய்.பாட்டில் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. மார்ச் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதுகின்றன.
Trending
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் அறிமுக சீசனுக்கான வீராங்கனைகள் ஏலத்தில், அதிகபட்சமாக இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ரூ.3.40 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு வாங்கப்பட்டார். இந்நிலையில், ஆர்சிபி அணிக்கு டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்ஸா வழிகாட்டியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து ஆர்சிபி தனது ட்விட்டர் பக்கத்தில், “மகளிருக்கான இந்திய விளையாட்டுகளில் முன்னோடி, ஒரு யூத் ஐகான், அவரது வாழ்க்கை முழுவதும் தைரியமான பல தடைகளை கடந்து விளையாடிய ஒருவர், மற்றும் களத்திற்கு வெளியேயும் ஒரு சாம்பியன். ஆர்சிபி மகளிர் கிரிக்கெட் அணியின் வழிகாட்டியாக சானியா மிர்ஸாவை வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து சானியா மிர்ஸா கூறுகையில், “என்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்வேன். அணியை வலிமையாக்க ஆலோசனைகளை வழங்குவேன். மகளிர் கிரிக்கெட்டில் முதல் முயற்சியாக ஐபிஎல் கொண்டு வந்திருப்பதை வரவேற்கிறேன். நிறைய பெண்கள் விளையாட்டை கெரியராக எடுத்துக் கொள்ள முன்வருவார்கள் என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now