
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது இலங்கையில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இத்தொடரில் இன்று நடைபெற்ற மூன்றாவது லீக் ஆட்டத்தில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள மலேசியா மற்றும் தாய்லாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற தாய்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி களமிறங்கிய நன்ஃபட் சௌஹான் ரன்கள் எதுமின்றி விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீராங்கனையான பூச்சாதமும் 18 ரன்களுடன் நடையைக் கட்டினார்.
அதன்பின் களமிறங்கிய கோஞ்சரோன்கை ஒருபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் களமிறங்கிய கேப்டன் திபட்சா புத்தாவோங் 9 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கோஞ்சரோன்கை 40 ரன்களில் விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய மாயா 29 ரன்களை சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீராங்கனைகள் அனைவரும் சோற்ப ரன்களில் நடையைக் கட்டினார். இதனால் 20 ஓவர்கள் முடிவிக் தாய்லாந்து அணியானது 6 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களைச் சேர்த்தது. மலேசியா அணி தரப்பில் இஸ்மைல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய மலேசிய அணிக்கு கேப்டன் வினிஃப்ரெட் துரைசிங்கம் - வான் ஜூலியா இணை பொறுப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் கேப்டன் வினிஃபரெட் துரைசிங்கம் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய எல்ஸா ஹண்டர் 9 ரன்களிலும் இஸ்மாயில் ரன்கள் ஏதுமின்றியும், ஹஷிம் 6 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். இருப்பினும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய வான் ஜூலியா தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.