
மகளிருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் ஜூலை 19ஆம் தேதி முதல் இலங்கையில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாள், யுஏஇ, தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய அணிகள் பங்கேற்கொற்கவுள்ளன. அதன்படி ஜூலை 19ஆம் தேதி தொடங்கும் இத்தொடரின் இறுதிப்போட்டியானது ஜூலை 28ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது.
மேலும் இத்தொடரில் பங்கேற்கும் 8 அணிகளும் இரு குழுக்களாக பிரிந்து லீக் சுற்றில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. அதன்படி இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாள் மற்றும் யுஏஇ அணியும், குரூப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய அணிகளும் இடம்பிடித்துள்ளன. இதில் லீக் சுற்றின் முடிவில் குரூப் அட்டவணையில் டாப் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இத்தொடருக்கான அட்டவணையை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி இத்தொடரின் முதல் போட்டியில் யுஏஇ மற்றும் நேபாள் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் இந்திய அணி 19ஆம் தேதி முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியையும், ஜூலை 21ஆம் தேதி இரண்டாவது போட்டியில் யுஏஇ அணியையும், ஜூலை 23ஆம் தேதி மூன்றாவது போட்டியில் நேபாள் அணியையும் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.