மகளிர் ஆசிய கோப்பை: இந்தியாவை வீழ்த்தியது பாகிஸ்தான்!
பாகிஸ்தான் மகளிர் அணிக்கெதிரான ஆசிய கோப்பை போட்டியில் இந்திய மகளிர் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது.
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் நடந்துவருகிறது. இந்திய மகளிர் அணி முதல் 3 போட்டிகளில் இலங்கை, மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகளை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற நிலையில், இன்று சில்ஹெட்டில் பாகிஸ்தானை எதிர்கொண்டு ஆடிவருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் விளையாடியது.
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் மகளிர் அணியில் தொடக்க வீராங்கனைகள் இருவரும் சோபிக்கவில்லை. 3ஆம் வரிசையில் இறங்கிய கேப்டன் மரூஃப் 32 ரன்கள் அடித்தார். ஒமைமா ரன்னே அடிக்காமல் டக் அவுட்டானார்.
Trending
பொறுப்புடனும் அதேவேளையில் அதிரடியாகவும் பேட்டிங் ஆடி அரைசதம் அடித்த நிதா தர், 37 பந்தில் 56 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 137 ரன்கள் மட்டுமே அடித்த பாகிஸ்தான் அணி, 138 ரன்கள் என்ற எளிய இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்துள்ளது.
இந்திய அணி சார்பில் அனைவருமே அபாரமாக பந்துவீசினர். ஆனாலும், தீப்தி ஷர்மா மற்றும் பூஜா வஸ்ட்ராகர் சற்று கூடுதல் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தினர். தீப்தி 3 விக்கெட்டுகளையும், பூஜா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் மேகானா 15, ஸ்மிருதி மந்தனா 17, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 2, ஹெமலதா 20, பூஜா வஸ்திரேகர் 5, தீப்தி சர்மா 16, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 12 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
இதையடுத்து களமிறங்கிய ரிச்சா கோஷ் 3 சிக்சர், ஒரு பவுண்டரி என 13 பந்துகளில் 26 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் பெவிலியனுக்கு திரும்பினர்.
இதனால் 19.4 ஓவர்களில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 124 ரன்களை மட்டுமே சேர்த்தது. பாகிஸ்தான் தரப்பில் நாஷ்ரா சந்து 3 விக்கெட்டுகளையும், சதியா இக்பால், நிதா தார் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனால் பாகிஸ்தான் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்று அசத்தியது.
Win Big, Make Your Cricket Tales Now