மகளிர் டி20 சேலஞ்ச்: டிரெயில்பிளேசர்ஸை பந்தாடியது சூப்பர்நோவாஸ்!
மகளிர் டி20 சேலஞ்ச்: டிரெயில்பிளேசர்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சூப்பர்நோவாஸ் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
மகளிர் டி20 சேலஞ்ச் தொடரில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் சூப்பர்நோவாஸ் - டிரெயில்பிளேசர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற சூப்பர்நோவாஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய சூப்பர் நோவாஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 163 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 37 ரன்களையும், ஹர்லீன் டியல் 35 ரன்களைச் சேர்த்தனர்.
Trending
அதன்பின் கடின இலக்கை துரத்திய டிரெயில்பிளேசர்ஸ் அணிக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனா - ஹீலே மேத்யூஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். அதன்பின் 18 ரன்களை எடுத்திருந்த ஹீலே மேத்யூஸ் ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் தொடர்ந்து அதிரடியாக விளையாடிவந்த ஸ்மிருதி மந்தனா 34 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து களமிறங்கிய சோஃபியா டாங்க்லி, ஷர்மின் அக்தர், ரிச்சா கோஷ், அருந்ததி ரெட்டி, சல்மா கான் என அனைவரும் சூப்பர்நோவாஸின் அபார பந்துவீச்சால் அடுத்தடுத்த ஓவர்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
இதைத்தொடர்ந்து அணியின் நம்பிக்கையாக இருந்த ஜெமிமா ரோட்ரிக்ஸும் 24 ரன்களில் பெவிலியன் திரும்ப டிரெயில்பிளேசர்ஸின் தோல்வியும் உறுதியானது. இறுதியில் ராஜஸ்வரி கெய்க்வாட், ரேனுகா இணை ஒருசில பவுண்டரிகளை அடித்தனர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் டிரெயில்பிளேசர்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 114 ரன்களை மட்டுமே எடுத்தது. சூப்பர்நோவாஸ் அணி தரப்பில் பூஜா வஸ்த்ரேகர் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதன்மூலம் சுப்பர்நோவாஸ் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் டிரெயில்பிளேசர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.
Win Big, Make Your Cricket Tales Now