
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 15ஆவது லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள நியூசிலாந்து மற்றும் இலங்கை மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு விஷ்மி குணரத்னே - கேப்டன் சமாரி அத்தபத்து இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் குணரத்னே 8 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த சமாரி அத்தபத்துவும் 35 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய ஹர்ஷிதா மாதவி 18 ரன்களிலும், கவிஷா தில்ஹாரி 10 ரன்களிலும், அனுஷ்கா சஞ்சீவனி 5 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் நிலாக்ஷி டி சில்வா 14 ரன்களையும், அமா காஞ்சனா 10 ரன்களையும் சேர்த்து ஃபினிஷிங்கை கொடுத்தனர்.
இதன்மூலம் இலங்கை மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்களை மட்டுமே சேர்த்தது. நியூசிலாந்து அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய லே காஸ்பெரெக் மற்றும் அமெலியா கெர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணிக்கு சூஸி பேட்ஸ் மற்றும் ஜார்ஜியா பிளிம்மர் இணை அதிரடியான தொடக்கத்தை வழங்கினர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 49 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் சூஸி பேட்ஸ் 17 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.