
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 14ஆவது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் முனீபா அலி மற்றும் சித்ரா அமீன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் முனீப அலி 7 ரன்களில் நடையைக் கட்ட, அடுத்து களமிறங்கிய சதாஃப் ஷமாஸ் 3 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சித்ரா அமீனும் 12 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ஒமைமா சோஹைல் 3 ரன்களிலும், நிதா தார் 10 ரன்களிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 39 ரன்களிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன்பின் ஜோடி சேர்ந்த அலியா ரியாஸ் மற்றும் இராம் ஜவெத் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் இராம் ஜவெத் 12 ரன்களில் விக்கெட்டை இழந்த நிலையில், நிதானமாக விளையாடி வந்த அலியா ரியாஸ் 26 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய வீராங்கனைகளும் ஆஸ்திரேலிய பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். இதனால் பாகிஸ்தான் மகளிர் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 82 ரன்களுக்கே ஆல் அவுட்டானது.