
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் லீக் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்ற 10ஆவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
ஷார்ஜாவில் உள்ள ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு கேப்டன் அலீசா ஹீலி மற்றும் பெத் மூனி இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இதன்மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 41 ரன்களை எட்டியது.
அதன்பின் 4 பவுண்டரிகளுடன் 26 ரன்களைச் சேர்த்த நிலையில் அலீசா ஹீலி தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் பெத் மூனியுடன் இணைந்த எல்லிஸ் பெர்ரியும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பெத் மூனி 40 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 30 ரன்களை எடுத்த நிலையில் எல்லிஸ் பெர்ரியும் விக்கெட்டை இழந்தார்.