
ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைற்ற நான்காவது லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
அதன்படி துபாயில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இந்திய அணியை பந்துவீச அழைத்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து மகளிர் அணிக்கு சூஸி பேட்ஸ் மற்றும் ஜார்ஜியா பிளிம்மர் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 67 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் சூஸி பேட்ஸ் 27 ரன்களைச் சேர்த்து தனது விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த ஜார்ஜியா பிளிம்மர் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 34 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய அமெலியா கெரும் 13 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதனைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த கேப்டன் சோஃபி டிவைன் மற்றும் புரூக் ஹாலிடே இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளையும் விளாசி ஸ்கோரை உயர்த்தினர்.