
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 16ஆவது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேச மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு திலாரா அக்தர் மற்றும் சதி ராணி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் திலாரா அக்தர் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 19 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் சதி ராணியும் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் இணைந்த சோபனா மோஸ்டாரி - கேப்டன் நிகர் சுல்தானா இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர்.
இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் மூன்றாவது விக்கெட்டிற்கு 42 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சோபனா மோஸ்டாரி 4 பவுண்டரிகளுடன் 38 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதேசமயம் மறுமுனையில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிகர் சுல்தானா இறுதிவரை ஆட்டமிழக்காமல் 32 ரன்களைச் சேர்த்தார்.