
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு குரூப் ஏ பிரிவில் இருந்து ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளும், குரூப் பி பிரிவில் இருந்து தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளும் முன்னேறின.
இந்நிலையில் இத்தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு கிரேஸ் ஹாரிஸ் மாற்றும் பெத் மூனி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கிரேஸ் ஹாரிஸ் 3 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ஜார்ஜியா வர்ஹேமும் 5 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து நடையைக் கட்டினார்.
பின்னர் இணைந்த பெத் மூனி மற்றும் கேப்டன் தஹ்லியா மெக்ராத் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் 27 ரன்களை எடுத்திருந்த தஹ்லியா மெக்ராத் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதத்தை நெருங்கிய பெத் மூனி 44 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.